குடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பசுமை வீடுகளை விரும்பியபடி கட்டிக்கொள்ள தனி ஆணை பிறப்பிக்கப்படும்


குடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பசுமை வீடுகளை விரும்பியபடி கட்டிக்கொள்ள தனி ஆணை பிறப்பிக்கப்படும்
x
தினத்தந்தி 1 Sep 2018 10:45 PM GMT (Updated: 1 Sep 2018 9:26 PM GMT)

குடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பசுமை வீடுகளை விரும்பியபடி கட்டிக்கொள்ள தனி ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் கருமந்துறையில் 10 மலை கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருமந்துறையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.2.99 கோடியில் 3 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.12.77 கோடியில் முடிவுற்ற 16 திட்டப்பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருமந்துறை பகுதியில் கல்வராயன் மலைகள், பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் உள்ளிட்ட பல்வேறு மலைகள் உள்ளன. இந்த மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களை கொண்ட இந்த மலைப்பகுதியில் இனி வருங்காலத்தில் பலதரப்பட்ட மக்களும் வாழும் வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மலைவாழ் மக்களுக்கு என கடந்த 8 ஆண்டுகளில் ரூ.167.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கருமந்துறை மலைப்பகுதியில் 10 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் கொளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 16-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

கருமந்துறையில் சாலைகள் சீரமைத்து விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். மேலும், இந்த பகுதிக்கு மினி பஸ் வழங்கப்படும். கருமந்துறையில் இருந்து பாப்பநாயக்கன்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் குறுகியதாக உள்ளதால், அதன் அருகில் புதிய பாலம் கட்டிக்கொடுக்கப்படும்.

குடிசையில் வாழும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் கட்டித்தர தனி கவனம் செலுத்தப்படும். அதாவது, குடிசையில் வாழும் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையானது போல் வீடுகளை கட்டிக்கொள்ளலாம். அதற்கு தனி ஆணை பிறப்பிக்கப்பட உள்ளது.

மேலும் 110 நபர்களுக்கு கறவை பசுமாடுகளும், வனத்துறையின் மூலமாக கோழி வளர்ப்பதற்கு கோழிக்குஞ்சுகளும் கொடுத்துள்ளோம். எனவே, மலைவாழ் மக்கள் கோழிக்குஞ்சுகளை பெருக்கி பொருளாதாரத்தில் மேம்பாடு அடையலாம். ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இது மக்கள் அரசு. ஏழை மக்களுக்கான ஆட்சியை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 27 ஆண்டுகள் கொடுத்தார்கள். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நான் கடந்த 1½ ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 2 ஆயிரத்து 760 பயனாளிகளுக்கு ரூ.11.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், அவர் மலைவாழ் மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கினார்.

முன்னதாக கருமந்துறை-சின்னகல்வராயன் மலை வடக்குநாடு ஊராட்சி பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு நுழைவு வாயிலை திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதன்முறையாக கருமந்துறைக்கு வந்ததால் அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருமந்துறைக்கு சென்றதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த ஜீப்பில் மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

விழாவில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மாவட்ட கலெக்டர் ரோகிணி, எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து, வெற்றிவேல், சித்ரா, மனோன்மணி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், தலைவாசல் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.டி.அர்ச்சுணன், தங்கமணி, பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அருண்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் வாசுதேவன், அன்பரசு, மோகன், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஏத்தாப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story