திகைக்க வைக்கும் தீவு மனிதர்


திகைக்க வைக்கும் தீவு மனிதர்
x
தினத்தந்தி 2 Sept 2018 12:47 PM IST (Updated: 2 Sept 2018 12:47 PM IST)
t-max-icont-min-icon

1979-ம் ஆண்டு முதல் அயராது உழைத்து, மணல்மேடாக காட்சியளித்த தீவு பிரதேசத்தை அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலை வனமாக உருமாற்றியிருக்கிறார், ஜாதவ் பேயங்.

எந்தவகையான மரங்களோ, உயிரினங்களோ வாழ்வதற்கு தகுதி இல்லாத தீவு, இவருடைய முயற்சியால் சொர்க்கபுரியாக விளங்குகிறது.

அசாம் மாநிலத்தில் மஜுலி பகுதியில் இந்த தீவு அமைந்திருக்கிறது. அங்குள்ள வெண் மணல்பரப்பை சூழ்ந்திருக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் எறும்புகள் முதல் விலங்குகள் வரை நடமாடமுடியாத சூழல் நிலவி இருக்கிறது. வெயிலின் வெம்மையாலும் தீவு மணலின் சூடு தாங்காமலும் மடிந்து போன நூற்றுக்கணக்கான பாம்புகளை பார்த்ததும் ஜாதவ் மனம் துடித்து போனார். மனிதர்களாலும் மணல் பரப்பில் கால் வைத்து சிறிது நேரம் கூட நடமாடமுடியாது. அந்த நிலையை மாற்றுவதற்காக தனக்கு கிடைத்த மரக்கன்றுகளையும் விதைகளையும் தீவில் விதைத்தார். ஆரம்பத்தில் தோல்வியே மிஞ்சியது.

வெண்மணல் பரப்பு என்பதால் எந்த விதையும் துளிர்க்கவில்லை. மூங்கில் மட்டும் வளர வாய்ப்பிருக்கிறது என்பது வனத்துறை மூலம் தெரிய வந்திருக்கிறது. மூங்கில் கன்றுகளையாவது வளர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் களம் இறங்கினார். அவருடைய முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மூங்கில் கன்றுகள் துளிர்விட்டு வளர தொடங்கி இருக்கிறது. வருமானத்திற்கு கால்நடைகளை வளர்த்து வந்திருக்கிறார். அவற்றின் சாணத்தை வீணாக்காமல் இயற்கை உரம் தயாரித்து மண்ணின் வளத்தை மேம்படுத்தினார். இதையடுத்து பலவகை மரக்கன்றுகளையும், விதைகளையும் ஊன்ற தொடங்கினார்.

கன்றுகள் துளிர்விட்ட காலத்தில் அவருக்குள் காதலும் துளிர் விட்டிருந்தது. தன்னை விட 14 வயது குறைவான பினிட்டா மீது அவருக்கு காதல் அரும்பியிருக்கிறது. அதற்கு அவரது வீட்டில் ஆதரவு கிடைத்தாலும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மரக்கன்றுகளை வளர்க்க போராடி வெற்றி பெற்றது போலவே காதல் வாழ்க்கையிலும் ஜெயித்து பினிட்டாவை திருமணம் செய்து கொண்டார். பினிட்டாவும் கணவரின் முயற்சிக்கு துணையாக நின்றதால் தீவு பகுதி பசுஞ்சோலைவனமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

ஜாதவின் விடா முயற்சியால் வெண்மணல் தீவு காடாக உருமாறத் தொடங்கியது. காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து விலங்குகள் இந்த தீவிற்கு வரத்தொடங்கின. அவற்றுக்கு இடையூறு இல்லாத வகையில் தனது பாதையை மாற்றியமைத்துக் கொண்டார். விவசாயம் செய்யும் அளவிற்கு அந்த தீவை வளப்படுத்திவிட்டார். அங்கு குடும்பத்துடன் தங்கி இருந்து விவசாய பணிகளையும் தொடங்கினார். அதை பார்த்து ஏராளமானவர்கள் தீவுக்குள் இடம்பெற தொடங்கினார்கள். அதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது.

‘‘ஆரம்பத்தில் விவசாயம் நடக்கும் இடத்தில் காட்டெருமைகள் நுழைந்த போது தீவில் இருந்த மக்கள் அவற்றை அடித்து துரத்தினார்கள். அவர்களை தட்டிக் கேட்ட என்னையும் அடித்து விட்டனர். யானைகள் பயிர்களை தின்று விடுகிறது என்று குறைகூறினர். காட்டுவிலங்குகள் உணவிற்காக விவசாயமா செய்யும்? பின்னர் நான் விலங்குகள் விவசாய நிலத்திற்குள் வராத அளவிற்கு அவற்றுக்குத் தேவையான பயிர்களை தீவின் ஒரு பகுதியில் பயிரிட்டேன். பின்னர் அடுத்த பிரச்சினை புலியால் வந்தது. புலி கால்நடைகளை வேட்டையாடிச் செல்வதால் அதை வேட்டையாட மக்கள் முடிவெடுத்தனர்.

இந்த உலகம் எல்லா உயிர்களும் வாழ்வதற்கானது என்பதை மறந்து மனிதன் தனக்கு மட்டும் தான் உலகம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்கு வேட்டைக்காரர்கள் தீவை நோக்கி படையெடுத்தனர். மரத்தை வெட்டி காட்டை அழிக்கும் கும்பலிடம் இருந்தும் நான் உருவாக்கிய காடு தப்பவில்லை. பல ஆண்டுகளாக பாடுபட்டு நான் உருவாக்கிய காடு இப்படி மனிதனின் சுயநலத்தால் அழிவதைக் காணும் போது வேதனையாக இருக்கிறது. இந்தத் தீவினை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அருகில் மற்றொரு தீவில் ஒரு காட்டை உருவாக்கப் போகிறேன். எப்படியும் இன்னும் 30 ஆண்டுகளில் உருவாக்கி விடுவேன். என் மகன்கள் எனக்கு உதவுவார்கள்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜாதவ். 

Next Story