கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகள் சீரமைப்பு: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி பாதிப்பு


கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகள் சீரமைப்பு: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 6:50 PM GMT)

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில், தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாறாங்கற்களை கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அணையில் உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மறுநாளே தொடங்கியது. சீரமைப்பு பணிகளை கடந்த மாதம் 24-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது தற்காலிக சீரமைப்பு பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும் எனவும், கொள்ளிடம் அணையின் கிழக்குப்பகுதியில் 100 மீட்டர் தூரம் தள்ளி ஆற்றின் குறுக்கே ஒரு பகுதியில் ரூ.325 கோடியிலும், 10 கண்மாய் உள்ள மற்றொரு பகுதியில் ரூ.85 கோடியிலும் புதிதாக தடுப்பணை கட்டப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

தற்போது கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் பகல், இரவு என தலா 300 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய அணை கட்டுவதற்கான நிபுணர் குழுவினரும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை அணையில் 1-வது முதல் 5-வது மதகுகள் வரை மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மணல் மூட்டைகளை தாங்கும் அளவிற்கு பக்கவாட்டில் சவுக்கு கம்புகள் நடப்பட்டுள்ளன. இதேபோல வடகரை பகுதியில் 13-வது மதகில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், மணல் மூட்டைகளை ஆற்று தண்ணீருக்குள் அடுக்குவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் 6 முதல் 13-வது வரையிலான மதகுகள் உடைந்த பகுதியில் ஆழம் அதிகமாக இருப்பதால், அங்கு சவுக்கு கம்புகளை தொழிலாளர்களால் நடமுடியவில்லை. இதையடுத்து இரும்பு குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இரும்பு குழாய்கள் அணையின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் உடைந்த மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரை கட்டுப்படுத்த பாறாங்கற்களை அதிகளவில் கொட்டி, அடைப்புகள் ஏற்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, லாரிகளில் அதிகளவில் பாறாங்கற்கள் கொண்டு வரப்படுகிறது. அணையின் கிழக்கு பகுதியில் லாரிகள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக லாரிகள், டிராக்டர்கள் மூலம் பாறாங்கற்கள் கொண்டு செல்லப்பட்டு, கொட்டப்படுகின்றன. நேற்று மதியம் வரை 100 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பாறாங்கற்கள் கொட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீரமைப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “காவிரி ஆற்றில் இன்று (அதாவது நேற்று) தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், கொள்ளிடத்தில் 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. மதகுகள் உடைந்த பகுதியில் பாறாங்கற்கள் கொண்டு முழுமையாக அடைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பின்பு தான், ஆற்றில் தண்ணீர் செல்வதை தடுக்க முடியும். அதன்பின்பு தான் சேதமடைந்த அணையின் பகுதியில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும். இதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகலாம். மேலும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் 2 வாரம் ஆகும். அதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும்“ என்றார்.

Next Story