நெல் கொள்முதலை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவு: விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு


நெல் கொள்முதலை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவு: விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதலை நிறுத்தி வைத்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

சுந்தரக்கோட்டை,

மத்திய அரசாங்கம் நெல் குவிண்டால் 1-க்கு ரூ.200 கூடுதலாக விலை நிர்ணயம் செய்ததாக அறிவித்துவிட்டு தமிழ்நாட்டில் நெல் கொள்முதலையே நிறுத்தி உத்தரவு பிறப்பித்து இருப்பது கண்டிக்கதக்கது. இது விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கையாகும். இதனை தமிழக அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. தமிழக அரசு தனது நிதியில் இருந்து நெல் கொள்முதலை தொடரும் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் நயவஞ்சக நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அரசு அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சாகுபடி பருவங்களுக்கு இடைப்பட்ட ஒரு சில நாட்கள் தான் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொள்முதலை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மீண்டும் கொள்முதல் எப்போது தொடங்கும்? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இனி விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாத நிலையை மத்திய அரசு சட்டப்பூர்வமாக உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

முக்கொம்பு அணையில் ராணுவம் மூலமாக தற்காலிக கதவணைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து, பாசனத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும். ராசிமணலில் அணையை கட்டி உபரிநீரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி முக்கொம்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story