புதுச்சேரியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


புதுச்சேரியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Sept 2018 5:15 AM IST (Updated: 3 Sept 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தும் அந்த கல்லூரிகளில் அரசுக்கான இடஒதுக்கீட்டை பெறுவது தொடர்பாக எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடஒதுக்கீடு பெற சட்டம் இயற்றப்பட்டதால் அங்கு தடையின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைபெற்று மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.

ஆனால் புதுவையில் ஆட்சியாளர்கள் மனம்போன போக்கில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 25, 30, 35 சதவீதம் என இடங்களை பெறும் செயலை தொடர்ந்து செய்து வந்தனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்கூட 50 சதவீத இடங்களைபெற சட்டம் இயற்ற அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதற்கு ஆட்சியாளர்கள் முயற்சி எடுக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் இதே நிலையை கடைபிடித்து வருகின்றனர். மருத்துவக்கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசு, நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பதில் எந்த வழிகாட்டுதலும் கிடையாது. தற்போது காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களில் மாணவர்களை சேர்க்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள் கோர்ட்டு தீர்ப்பினைக்கூட மதிப்பதில்லை. கல்லூரி நிர்வாகம் 17 இடங்களை தருவதாக தெரிவித்திருந்தும் மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று மாணவர்களை சேர்க்க மறுக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை என்றாலே தன்னால்தான் நடந்தது என்று கூறும் கவர்னர் கிரண்பெடி இதில் என்ன நடவடிக்கை எடுத்தார்?

புதுவை அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.38 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவு பணம் ஒதுக்கப்பட்டது. அந்த பணம் யாரால் கையாடல் செய்யப்பட்டது? இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் சம்பளம் பெறுவது முறையா?

புதுவையில் அளவுக்கு அதிகமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் உள்ளனர். ஒரு அமைச்சரின் துறையை கவனிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியே போதும். எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story