டெண்டர் விட்டு ஓராண்டு நெருங்கியும் தென்பெண்ணையாறு படுகை அணை சீரமைக்கப்படாத அவலம்


டெண்டர் விட்டு ஓராண்டு நெருங்கியும் தென்பெண்ணையாறு படுகை அணை சீரமைக்கப்படாத அவலம்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

டெண்டர் விடப்பட்டு ஓராண்டு நெருங்கிவிட்ட நிலையில் தென்பெண்ணையாற்றில் படுகை அணை சீரமைப்பு பணி தொடங்கப்படாத அவலம் இருந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டும் மழையின்போது தேக்கி வைக்க முடியாமல் கடலில் கலந்து தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூர் அருகே தென்பெண்ணையாறு உள்ளது. இந்த ஆற்றில் மழை நீரினை சேகரித்து நிலத்தடி நீர் பாதிக்காத வகையிலும், விவசாயம் மற்றும் குடிநீர் கிடைக்கும் வகையிலும் புதுச்சேரி அரசால் சோரியாங்குப்பத்தில் அணையுடன் கூடிய மேம்பாலமும், சித்தேரி அணைக்கட்டு மற்றும் கொமந்தான்மேடு பகுதியில் படுகை அணையுடன் கூடிய தரைப்பாலமும் கட்டப்பட்டுள்ளது.

இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொமந்தான்மேடு தரைபால படுகை அணை சேதம் அடைந்தது. அப்போது இங்கு சேகரித்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்தது. அதன்பின் அவசர அவசரமாக செம்மண் கொட்டி தற்காலிகமாக சேதமடைந்த பகுதி சீர் செய்யப்பட்டது. ஆனால் பருவமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீண்டும் செம்மண்ணாலான ஒரு பகுதியில் பாலம் உடைந்து தேக்கி வைத்து இருந்த பல லட்சம் கன அடிநீர் கடலில் கலந்தது. தற்போது மீண்டும் செம்மண்ணால் பாலம் போடப்பட்டுள்ளது.

மீண்டும் மழை பெய்து வெள்ளம் வந்தால் இந்த செம்மண் பாலத்தில் உடைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாகும். மேலும் இப்பகுதியில் தண்ணீரை தேக்க முடியாததால் கடலூர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய்விட்டது. இதனால் பல இடங்களில் கடல்நீர் நிலத்தடிநீரில் கலந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொமந்தான்மேடு பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீர்செய்து படுகை அணை பாலம் கட்டி தண்ணீரை தேக்கவும், கரையை பலப்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் வெள்ளத்தால் உடைந்த பாலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னர் கிரண்பெடி நேரில் பார்வையிட்டு முழுமையாக பாலத்தின் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையொட்டி ரூ.4.50 கோடி செலவில் படுகை அணை பாலம் கட்ட டெண்டரும் விடப்பட்டது. ஆனால் சுமார் ஓராண்டை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படாத அவலம் நீடித்து வருகிறது.

எனவே தற்போது மழை பெய்ய உள்ள நிலையில் இந்த படுகை அணையில் தண்ணீர் தேக்கப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மீண்டும் பல லட்சம் கனஅடி தண்ணீர் விணாக கடலில் கலக்க வாய்ப்பு உள்ளது. அரசு உடனடியாக பாலம் கட்டும்பணியை தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதியில் தண்ணீரை சேகரிக்க தடுப்பணை அணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story