தி.மு.க. தலைவரான பின் முதல் வெளியூர் பயணம்: மு.க.ஸ்டாலினுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு


தி.மு.க. தலைவரான பின் முதல் வெளியூர் பயணம்: மு.க.ஸ்டாலினுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 Sep 2018 11:15 PM GMT (Updated: 2 Sep 2018 8:02 PM GMT)

தி.மு.க. தலைவரான பின் முதல் வெளியூர் பயணமாக மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு சால்வைகளை கொடுத்தனர்.

திருச்சி,

கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க. தலைவரான பின்னர் முதல் வெளியூர் சுற்றுப்பயணமாக நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஸ்டாலின் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விமான நிலையம் அமைந்துள்ள திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான தி.மு.க கொடிகள் கட்டப்பட்டு சாலை தடுப்புச்சுவரில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. விமான நிலையத்தில் பயணிகள் வெளியே வரும் வாசலுக்கு நேர் எதிராக ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

விமானத்தில் இருந்து இறங்கி ஸ்டாலின் வெளியே வந்ததும் அவரை ‘சாரட்’ வண்டியில் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சாரட் வண்டி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது தவிர அலங்கரிக்கப்பட்ட 2 குதிரைகளும் நின்று கொண்டிருந்தன. அந்த குதிரைகள் பேண்டு வாத்தியம் மற்றும் மேளதாளத்துக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தன. பெண்கள் கையில் உதிரி பூக்களுடன் கூடிய தட்டுக்களுடன் நின்று கொண்டிருந்தனர். வாண வேடிக்கைகள், அதிர் வேட்டுகள் முழங்கின.

ஸ்டாலின் சாரட் வண்டியில் ஏறவில்லை. அவர் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அந்த சாரட் வண்டி அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஸ்டாலின் காரில் ஏறியபோது அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவர் காரில் நின்றபடியே தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி வெளியே வந்து தனியாக போடப்பட்டிருந்த வரவேற்பு மேடையை நோக்கி சென்றார்.

ஸ்டாலின் மேடை அருகில் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த யானை அவருக்கு மாலை அணிவித்தது. அந்த யானைக்கு ஸ்டாலின் ஒரு சீப்பு செவ்வாழைப் பழங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மேடையில் ஏறிய மு.க.ஸ்டாலின் மீது தொண்டர்கள் மலர்களை தூவினார்கள். சால்வை மற்றும் பொன்னாடைகளை தொண்டர்கள் வரிசையாக வந்து வழங்கினார்கள். சிலர் ஆளுயர ரோஜாப்பூ மாலைகளையும் அணிவித்தனர். தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்ததால் மேடைக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு உடைந்தது. சுமார் 30 நிமிட நேரம் ஸ்டாலின் மேடையில் நின்றபடியே தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

இன்று காலை 7 மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சி முக்கொம்புக்கு செல்கிறார். அங்கு கடந்த மாதம் 22-ந்தேதி வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த கொள்ளிடம் மேலணையை பார்வையிடுகிறார். அதன் பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று காவிரி பாசன கடைமடை பகுதிகளை பார்வையிடுகிறார்.

Next Story