பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா 85 தம்பதியினர் கலந்து கொண்டனர்


பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா 85 தம்பதியினர் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் 85 தம்பதியினர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

உலகம் முழுவதும் தந்தை நாள், அன்னையர் தினம், நண்பர்கள் தினம், கணவன் நாள், குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றன. மனைவியின் சிறப்பை போற்றும் விதத்தில், மனைவி நாள் என்று யாரும் கொண்டாடுவது இல்லை. சமூகத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வை போக்கும் விதத்தில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்தநாளை ஆகஸ்டு 30-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மனைவி நல வேட்பு நாள் விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்த தம்பதிகளை பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். விழாவில் முதலில் இறை வணக்கம், குரு வணக்கம், தவம் ஆகியவை நடந்தது. பின்னர் தம்பதிகளுக்கு முதலில் காப்பு கயிறு, ரோஜாப்பூ, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

முதலாவதாக தம்பதிகளில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும், பின்னர் மனைவிமார்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டினர். இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். அதனை தம்பதியினர் செய்தனர். பின்னர் கணவர்கள் தங்களது மனைவியின் தலையில் ரோஜாப்பூ வைத்து விட்டனர். இதையடுத்து மனைவிமார்கள் தங்களது கணவருக்கு வாழைப்பழத்தை ஊட்டி மகிழ்ந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட சுந்தர்ராஜூ-ஹேமலதா என்ற தம்பதியினருக்கு நேற்று 29-வது ஆண்டு திருமண நாளாகும். அவர்கள் மனைவி நல வேட்பு விழாவில் தங்களது திருமண நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமன தம்பதி முதல் வயதான தம்பதியினர் வரை என மொத்தம் 85 தம்பதியினர் கலந்து கொண்டனர். மொத்தத்தில் இந்த மனைவி நல வேட்பு விழா மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை கணவன்மார்கள் பெருமை படுத்தும் விதமாக அமைய பெற்றது. முடிவில் பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.

Next Story