தமிழ்நாடு போலீஸ் துறையில் கைரேகை உதவி ஆய்வாளர் பணி
தமிழக போலீஸ் துறையில் கை ரேகை உதவி ஆய்வாளர் பணிக்கு 202 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.என்.யு.எஸ்.ஆர்.பி. எனப்படுகிறது. காவல்துறைக்கு தேவையான காவலர்கள் மற்றும் அதிகாரிகளை இந்த அமைப்பு தேர்வு செய்கிறது. தற்போது இந்த அமைப்பு தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான கைரேகை நிபுணர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 202 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 30 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர் களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
20 சதவீத பணிகள் 5 ஆண்டுகள் பணிபுரிந்த காவல் துறையினருக்கு ஒதுக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஊதியமாக ரூ. 36,900-116600 பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 1-7-1990 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி பி.சி., பி.சி.எம்., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் விதவை, முன்னாள் படைவீரர்கள் ஆகியோருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வி்ண்ணப்பிக்கலாம். இவர்கள் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித் திருக்க வேண்டும்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.500 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் என்.சி.சி., விளையாட்டு சாதனை, உடல் அளவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவா்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
உடல் தகுதி
ஆண் விண்ணப்பதாரர்கள் 163 செ.மீ. உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். எடையளவு, உடல் உறுதி ஆகியவையும் பரிசோதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-9-2018-ந் தேதி யாகும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnusrbonline.org. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story