திட்டமிடாத நகர வடிவமைப்பும், காற்று மாசும்...!


திட்டமிடாத நகர வடிவமைப்பும், காற்று மாசும்...!
x
தினத்தந்தி 3 Sept 2018 4:57 PM IST (Updated: 3 Sept 2018 4:57 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்கள் காற்று மாசடைந்து வாழத் தகுதியற்றதாக மாறிக் கொண்டிருப்பதாக சமீப ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதற்கு முக்கிய காரணம் திட்டமிடாத நகர வடிவமைப்புதான் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் காற்று மாசு மிகுந்த நகரங்களாக பதிவாகி இருக்கின்றன. இது போன்ற காற்று மாசுக்கு முக்கிய காரணம் தொழிற்சாலைகள்தான் என்று நாம் எண்ணி வருகிறோம். கட்டிட வடிவமைப்பு களும் நகர்ப்புற காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்கிறது நியூசிலாந்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வு.

அங்குள்ள சென்டர்பரி பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள் குழு, கட்டிட மாதிரிகளை அடைப் படையாக வைத்து இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. நெருக்கடி மிகுந்த கட்டிடங்கள், ஏற்ற இறக்கங்கள் கொண்ட கட்டிடங்கள், பசுமைச் சூழல் இல்லாத கட்டிடங்கள் என பலவிதமான மாதிரிகளில் கட்டிட வடிவங்களை உருவாக்கி ஆய்வு மேற்கொண்டதில் திட்டமிடாத நகர வடிவமைப்பே காற்று மாசுக்கு முக்கிய காரணம் என தெரியவந்தது.

எவ்வளவு குடியிருப்புகள் உருவாக்கப்பட வேண்டும், எவ்வளவு இடைவெளியில் தொழிற்சாலை அமைகிறது, மக்கள் வாழ்வதற்கேற்ற பசுமைப்பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? என்பதை ஆராய்ந்து நகர்ப்புறத்தை உருவாக்கினால் மாசுகள் பெருகாமல், மனிதர்கள் நல்ல சூழலில் வாழலாம் என தெரியவந்தது.

மேலும் நகரத்தின் மையத்தில் வாழ்பவர்களைவிட, நகரத்தை ஒட்டிய கிராமப்புற பகுதியினர் இந்த காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. ஏனெனில் நகரத்தில் உருவாக்கப்படும் காற்று மாசுகள் சுற்றுப்புற பசுமைப்பரப்புகளால்தான் சீர் செய்யப்படுகிறது. இதனால் நகரத்திற்கு அருகில் வசிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும், நீண்ட நேரம் பயணம் செய்து நகரங்களுக்கு வேலைக்கு வந்து செல்பவர் களுமே காற்று மாசினால் அதிகம் பாதிக்கப் படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சீரான உயரமுள்ள கட்டிடங்கள், தகுந்த பசுமை பூங்காக்கள் சூழ உருவாக்கப்படும் நகரங்களே மனிதர்கள் வாழ ஏற்றவை என்கிறது அந்த ஆய்வு! ஸ்மார்ட் நகரம் என்றும், துணை நகரம் என்றும் நகர விரிவாக்கத்தில் இறங்கும் அரசு நிர்வாகங்கள், இதுபோன்ற பல்வேறு ஆராய்ச்சிகளுடன் நகரங்களை வடிவமைப்பது சிறந்தது!

Next Story