வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை கண்டித்து தெருமுனை கூட்டம் காங்கிரஸ், பா.ம.க. கட்சியினர் பங்கேற்பு


வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை கண்டித்து தெருமுனை கூட்டம் காங்கிரஸ், பா.ம.க. கட்சியினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

அடையாறு பகுதியில், 56 கடைகளுக்கு ‘சீல்’ வைத்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள், காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அடையாறு,

சென்னை பெசன்ட் நகர் 3–வது அவென்யூ சர்வீஸ் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 56 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அந்த இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டது. இதனை தொடர்ந்து கடைகளை காலி செய்யும்படி கடையில் வாடகைக்கு இருந்த வியாபாரிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 21–ந் தேதி அந்த இடத்திற்கு சென்ற வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கடைகளில் இருந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி 56 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அந்த பகுதியில் இரும்பு தகடுகள் வைத்து தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

கடைகளை காலி செய்ய காலஅவகாசம் கேட்டபோதிலும் அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், அதிகாரிகளின் இந்த செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினார்கள்.

இந்த நிலையில் கடைகளுக்கு வலுக்கட்டாயமாக ‘சீல்’ வைத்த வீட்டு வசதி வாரியத்தை கண்டித்து நேற்று அடையாறு, வண்ணாந்துறை, எல்லையம்மன் கோவில் அருகே பெசன்ட் நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் மோகன், சிறு கடை வியாபாரிகள் சங்க தலைவர் நந்தகுமார் மற்றும் பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளும் பங்கேற்றனர். வியாபாரிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்படி ஒப்படைக்காவிடில் அடுத்த கட்டமாக வியாபாரிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் எந்த நீதிமன்ற உத்தரவும் மீறப்படவில்லை. உரிய நடைமுறைகளை பின்பற்றியே கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது’ என்றார்.

Next Story