கருணாநிதி காட்டிய வழியில் எனது பயணம் தொடரும் வீட்டின் வருகைப்பதிவேட்டில் ஸ்டாலின் கைப்பட எழுதிய வாசகம்


கருணாநிதி காட்டிய வழியில் எனது பயணம் தொடரும் வீட்டின் வருகைப்பதிவேட்டில் ஸ்டாலின் கைப்பட எழுதிய வாசகம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீட்டுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அப்போது அங்குள்ள வருகைப்பதிவேட்டில் ஸ்டாலின் தனது கைப்பட எழுதிய வாசகத்தில், தலைவருடனும் வந்துள்ளேன், தனியாகவும் வந்துள்ளேன். இன்று தி.மு.க. தலைவராக நான் வந்திருந்தாலும் கருணாநிதி காட்டிய வழியில் எனது பயணம் தொடரும் என்று எழுதி இருந்தார்.

வேளாங்கண்ணி,

தி.மு.க. தலைவராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த வீட்டின் அருகே கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க, பட்டாசு வெடித்து மு.க.ஸ்டாலினை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அவர் கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று பொதுமக்கள் வழங்கிய நினைவு பரிசுகளை பெற்றுக்கொண்டார். ஸ்டாலினுக்கு ஏராளமானோர் புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினர்.

மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் வீணையும், ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலும், தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் வெள்ளியாலான செங்கோலும் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினர்.

முன்னதாக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

அந்த பதிவேட்டில் அவர் தனது கைப்பட எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:-

கருணாநிதி வழியில் எனது பயணம் தொடரும்

தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பல முறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக வந்துள்ளேன்.

கழக தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும்.

வாழ்க கலைஞர்!

இவ்வாறு அந்த வருகைப்பதிவேட்டில் ஸ்டாலின் எழுதியிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story