மைசூருவில் இருந்து கூடலூருக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் சிக்கினார், கூட்டாளியும் கைது
மைசூருவில் இருந்து கூடலூருக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் போலீசில் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டார்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்துக்கு கர்நாடகாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து, செல்கின்றன. அதில் அங்கிருந்து கஞ்சா, குட்கா, மதுபானங்களை கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவோரை பிடிக்க இருமாநில எல்லையில் கக்கநல்லா சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் போலீசார், கடத்தலில் ஈடுபடுவோரையும் அவ்வப்போது கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மைசூருவில் இருந்து ஊட்டிக்கு நோக்கி கர்நாடக அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணி தனது பையில் அரை கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. உடனே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூடலூரை அடுத்த பாலவாடி பகுதியை சேர்ந்த குணசேகரன்(வயது 21) என்பதும், மைசூருவில் இருந்து கூடலூருக்கு கஞ்சா கடத்தி வந்ததும், ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் கூடலூர் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணசேகரன் மசினகுடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடத்தி வந்த கஞ்சாவை கூடலூரை சேர்ந்த அவரது கூட்டாளியான சத்தியமூர்த்தி(23) என்பவரிடம் கொடுக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.