மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Sept 2018 5:00 AM IST (Updated: 4 Sept 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்(வயது 32). இவர் மதுரவாயலை அடுத்த அடையாளம் பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்மிரிஜா(35). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் விளம்பரம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான கார்டுகளை டிசைன் செய்யும் அலுவலகத்தை வீட்டிலேயே வைத்து நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் இருந்து ஸ்மிரிஜா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்தார்த் கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஸ்மிரிஜா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் ஸ்மிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சித்தார்த் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கும், ஸ்மிரிஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இருவரும் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.

வரும் வழியில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு வந்தவுடன் ஸ்மிரிஜா கோபித்துக்கொண்டு அவரது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். சித்தார்த் வீட்டின் ஹாலில் படுத்துக்கொண்டார் பின்பு காலையில் எழுந்து பார்த்தபோதுதான் மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

ஸ்மிரிஜா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்மிரிஜாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story