தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்
தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என குற்றாலத்தில் நடந்த விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
தென்காசி,
பாரதீய ஜனதா கட்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஆயிரம் பேர் இணையும் விழா நேற்று குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில துணை தலைவர் சுப நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவரது முன்னிலையில், மேலப்பாவூரை சேர்ந்த என்ஜினீயர் சிவநாதன் தலைமையில் தேவேந்திர குல வேளாளர்கள் ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
சொந்த காலில் நிற்கும் நீங்கள், எங்களுக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் அடங்கி போக மாட்டோம். எங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று கூறி இங்கு வந்துள்ளர்கள். உங்களுக்கு உரிய அடையாளம், பா.ஜ.க.வில் நிச்சயம் கிடைக்கும். ஒரு கூட்டத்தில் அரசியல் தலைவர் பேசும்போது, நான் சாதியை ஒழிக்கத்தான் அரசியலில் ஈடுபடுகிறேன். சாதி அரசியல் நிச்சயம் ஒழிய வேண்டும் என்று கூறிவிட்டு கடைசியில் எனக்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் நான் உங்கள் சாதி என்கிறார். இதுதான் இன்றைய நிலை.
பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி, தேவேந்திர குல வேளாளர்கள் என ஒரே அமைப்பில் அமைய பா.ஜ.க. அரசாணையிடும். தற்போது தமிழகத்தில் பா.ஜ.க.வை பார்த்து மற்றவர்கள் பதற்றம் அடைகிறார்கள். தமிழகத்தில் மாற்றம் தேவை. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சட்டமன்ற பொறுப்பாளர்கள் ராமராஜா, பாண்டித்துரை, அருள் செல்வன், குட்டி, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், குற்றாலம் நகர தலைவர் செந்தூர் பாண்டியன், துணை தலைவர் திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story