புதுவை அரியாங்குப்பத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி


புதுவை அரியாங்குப்பத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 AM IST (Updated: 4 Sept 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரியாங்குப்பத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. நகைகளை அடகு வைத்து முதலீடு செய்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் விட்டு கதறினர்.

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே கடந்த ஜூலை மாதம் எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனம் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகாயம், ராஜா, சுரேஷ், சிவசங்கர் ஆகிய 4 பேர் பங்குதாரர்களாக சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். அரியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து சிலர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் ஆண்டு இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு தனிநபர் கடனாக ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு அந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதனால் பலகோடி ரூபாய் முதலீடாக குவிந்தது. பணம் டெபாசிட் செய்தவர்களில் சிலர் தனிநபர் கடன் குறித்து நிதி நிறுவன பங்குதாரர்களிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி பணம் தராமல் காலம் கடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிலருக்கு நேற்று பணம் தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர். அதன்படி பணத்தை பெறுவதற்காக சிலர் ஆவலோடு நிதிநிறுவனத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு நிதி நிறுவனம் மூடிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல் அங்கு பணிக்கு வந்த ஊழியர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்து நிதிநிறுவன பங்குதாரர்களை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தங்களது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு எதுவே தெரியாது என புலம்பியபடி கண்ணீர் விட்டனர்.

இந்த தகவல் நிதிநிறுவனத்தில் பணம் கட்டிய மற்றவர்களுக்கும் பரவியது. அவர்களும் நிதிநிறுவனத்துக்கு படையெடுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். நிதிநிறுவனத்தில் பணம் கட்டிய சில பெண்கள் பெரிய தொகை கடனாக கிடைக்கும் என நம்பி தங்களது நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி உள்ளனர். கண்ணீர்மல்க அவர்கள் அழுது புலம்பியது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த மோசடி சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார்

தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story