மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:15 AM IST (Updated: 4 Sept 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், காதப்பள்ளி ஊராட்சி வீசாணத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 15-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, கோமாரிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் கால்நடைப்பாதுகாப்பு திட்ட முகாமினை தொடங்கி வைத்தும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவைகளையும், சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இம்முகாமில் கோமாரிநோய் தடுப்பூசி 850 பசு மற்றும் எருமைகளுக்கு போடப்பட்டது. 520 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும் முகாமில் செயற்கை முறை கருவூட்டல், ஆண்மைநீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போன்ற பணிகள் இலவசமாக செய்யப்பட்டது.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 15-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்த உள்ள 3.53 லட்சம் கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இத்தடுப்பூசி முகாமிற்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 113 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த கிராமங்களிலேயே தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்துச் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர்கள் பழனிவேல், விஜயகுமார், ராஜேந்திரன், பாஸ்கர் உள்பட கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story