நாமக்கல்லில் ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி 5 பேர் கைது


நாமக்கல்லில் ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2018 3:45 AM IST (Updated: 4 Sept 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் இம்மானுவேல் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் நல்லிப்பாளையம் சுடுகாடு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (21) மற்றும் சிலர் மது குடிக்க வந்தனர். மது குடித்து கொண்டு இருந்தபோது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் இம்மானுவேல் தரப்பினர் ஹரிகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் நகர் பாட்டப்பன் கோவில் அருகே இம்மானுவேல் வந்தபோது ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் அவரை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இம்மானுவேல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக நல்லிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் இம்மானுவேலை கொலை செய்ய முயன்றதாக ஹரிகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), பூபதி (25), கரிகாலன் (31) மற்றும் 19 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story