கோட்டாட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கோட்டாட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Sep 2018 10:00 PM GMT (Updated: 3 Sep 2018 8:31 PM GMT)

கள்ளக்குறிச்சியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி, 


கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் 1-வது குறுக்கு தெரு முதல் 7-வது குறுக்கு தெருவரை உள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வாரத்திற்கு ஒருநாள் அதிகாலையில் 10 நிமிடங்கள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் டிராக்டர் மூலமும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பியவாறு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி அறிந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் கோமதி நாயகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கொளஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story