அங்கன்வாடி மையங்களை பூட்டி சாவிகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முயற்சி 880 பேர் கைது


அங்கன்வாடி மையங்களை பூட்டி சாவிகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முயற்சி 880 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

கலந்தாய்வு நடத்தியும் பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்து அங்கன்வாடி மையங்களை பூட்டி சாவிகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த 880 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 611 அங்கன்வாடி பணியாளர், 635 உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,246 பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்பட்டு 1 ஆண்டு ஆகியும், பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்தும், உடனே பணி நியமன ஆணை வழங்க கோரியும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அங்கன்வாடி மையங்களின் சாவிகளை மாவட்டம் நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாக சமூகநலத்துறை பணியாளர் சங்கம் மற்றும் அனைத்து அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

இதற்காக தஞ்சை மாவட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களும், உதவியாளர்களும் தற்செயல்விடுப்பு எடுத்து கொண்டு தஞ்சை கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். இவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வராதபடி ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனால் பஸ்கள், ரெயில்களில் தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களையும், தஞ்சைக்கு செல்வதற்காக பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, திருவையாறு, செங்கிப்பட்டி, அம்மாப்பேட்டை, மதுக்கூர், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் உள்ள பஸ் நிலையங்களில் காத்து நின்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அனைவரும் தீவிர விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என்பது தெரிந்தால் உடனே அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுமக்கள் என்று கூறி 30-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர்.

அவர்கள் திடீரென கூட்டமைப்பு தலைவர் விஜயராகவன் தலைமையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக பணி நியமனம் ஆணை வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் மாவட்டம் நிர்வாகம் இனிமேலும் தாமதம் செய்தால் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை பூட்டுவோம் என்று கூட்டமைப்பு தலைவர் விஜயராகவன் நிருபர்களிடம் கூறினர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 880 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 1,749 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 435 மையங்களை பூட்டி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story