வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்துவிட்டு வந்த காதல்ஜோடி


வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்துவிட்டு வந்த காதல்ஜோடி
x
தினத்தந்தி 4 Sept 2018 3:28 AM IST (Updated: 4 Sept 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்துவிட்டு வந்த காதல்ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை,


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜா. இவர், கோவையில் தங்கியிருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்களின் காதல் விவகாரம் குறித்து, மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினர். மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதலர்கள், நேற்று முன்தினம் விஷத்தை குடித்துவிட்டு வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். மாணவி மட்டும் முதலில் போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். டேவிட்ராஜா வெளியே நின்றிருந்தார். தனது மகன் வந்ததை அறிந்த டேவிட்ராஜாவின் தாயார் போலீஸ் நிலையத்துக்கு வந்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

போலீஸ் நிலையத்தில் இருந்த மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, விஷம் குடித்த விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையே தாயாருடன் வீட்டிற்கு செல்லும் வழியில் மயங்கிய டேவிட்ராஜாவும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி விஷம் குடித்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story