இருதரப்பினர் இடையே மோதல் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உள்பட 6 பேர் கைது


இருதரப்பினர் இடையே மோதல் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2018 10:03 PM GMT (Updated: 3 Sep 2018 10:03 PM GMT)

திருவண்ணாமலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆவூ என்கிற தீபராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது இருதரப்பினர் மோதலாக மாறியது. இதனையடுத்து இருதரப்பினரும் வீச்சருவாள், கம்பு ஆகியவற்றின் மூலம் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த கண்ணதாசன், தீபராஜ், மணிகண்டன், ஆனந்தராஜ் ஆகிய 4 பேரை போலீசார் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கண்ணதாசன் என்பவர் தி.மு.க. நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆவார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தீபராஜ், விஜயராஜ் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜயராஜ், கண்ணதாசன், சாந்தகுமார், கஜபதி, ஓம்நமசிவாயம், புகழேந்தி, வின்சார்லஸ், தரணிதரன், தீபராஜ், மணிகண்டன், ஆனந்தராஜ், சிலம்பரசன், சரவணன், தேவா, அருண் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் விஜயராஜ், சாந்தகுமார், வின்சார்லஸ், தரணிதரன், சிலம்பரசன், அருண் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story