சொத்து வரியை உயர்த்திட சுயமதிப்பீடு விண்ணப்பம் - பொதுமக்கள் பூர்த்தி செய்து வழங்க காலக்கெடு


சொத்து வரியை உயர்த்திட சுயமதிப்பீடு விண்ணப்பம் - பொதுமக்கள் பூர்த்தி செய்து வழங்க காலக்கெடு
x
தினத்தந்தி 3 Sep 2018 10:48 PM GMT (Updated: 3 Sep 2018 10:48 PM GMT)

சேலம் மாநகராட்சியில் சொத்துவரியை உயர்த்திட பொது சீராய்வு நடைபெறுகிறது.

சேலம்,

பொதுமக்கள் தங்களது சொத்து விவரங்களை சுயமதிப்பீடு படிவங்கள் மூலம் அடுத்த மாதம்(அக்டோபர்) 3-ந் தேதிக்குள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது.

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி பொது சீராய்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவோர் தங்களது சொத்து விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுய மதிப்பீடு படிவத்தில் பூர்த்தி செய்து அடுத்த மாதம்(அக்டோபர்) 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவங்களை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், சூரமங்கலம் மண்டல அலுவலகம், அரிசிப்பாளையம் காமராஜர் திருமண மண்டப வளாகம், சூரமங்கலம் உழவர் சந்தை அம்மா உணவக வளாகம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், அப்புச்செட்டி தெரு, தொங்கும் பூங்கா வளாகம், அம்மாபேட்டை மண்டல அலுவலகம், நாராயண நகர் எம்.ஜி.ஆர். மருத்துவமனை அருகில், தேர்வீதி மாநகராட்சி பள்ளி வளாகம், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், ஜாரி கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம், மணியனூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் சுய மதிப்பீட்டு படிவங்களை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் வருகை தரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடமும் இந்த படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் ஆணையாளர் அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களிலோ, வரி வசூல் மையங்களிலோ அல்லது தங்களது பகுதிகளுக்கு தினமும் வருகை தரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடமும் வழங்கலாம். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட சுய மதிப்பீடு படிவத்தை தபால் மூலமாக அனுப்பி வைக்க விரும்புவோர் ஆணையாளர், சேலம் மாநகராட்சி, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, கோட்டை, சேலம்-1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவான அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் சுய மதிப்பீடு படிவங்களை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் சொத்துக்கள் மாநகராட்சி அலுவலர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி மாற்றியமைக்கப்படும். மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் மறு மதிப்பீட்டு பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story