மாவட்ட செய்திகள்

பாலியல் புகார் கூறிய மாணவி வேறு கல்லூரிக்கு செல்ல மறுப்பு + "||" + The student who sexually complained has refused to go to any other college

பாலியல் புகார் கூறிய மாணவி வேறு கல்லூரிக்கு செல்ல மறுப்பு

பாலியல் புகார் கூறிய மாணவி வேறு கல்லூரிக்கு செல்ல மறுப்பு
உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி, ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் நடத்திய விசாரணையின் போது வேறு கல்லூரிக்கு செல்ல மறுத்து விட்டார். மேலும் விசாரணையில் திருப்தி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வாணாபுரம், 


திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகில் உள்ள வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவி தங்கி இருந்த விடுதியின் காப்பாளர்களாக இருக்கும் பேராசிரியைகள், உதவி பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி போலீசாரிடம் வழங்கிய ஆடியோ பதிவுகளை வைத்து குரல் மாதிரி சோதனைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த சம்பவத்தை மூடி மறைக்க விடுதியில் உள்ள சக மாணவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ‘ராகிங்‘ கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 31-ந் தேதி பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வரும்படி சம்மன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை குழு இயக்குனர் சாந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாணவி முகத்தை மூடியவாறு வந்தார்.

விசாரணை முடிந்ததும் வெளியே வந்த ஒழுங்கு நடவடிக்கை குழு இயக்குனர் சாந்தி கூறுகையில், “மாணவியை விசாரணைக்கு அழைத்தோம். அதன்படி விசாரணைக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. மாணவி அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். எங்கள் தரப்பு மூலம் பேராசிரியைகள், உதவி பேராசிரியர், மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஆகியோரிடம் விசாரணை முடிவுற்றது. விசாரணை அறிக்கை விரைவில் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்” என்றார்.

இதே போல் பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், “என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சரியான முறையில் பதிலளித்தேன். மேலும் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றலாமா என்று கேட்டனர். ஆனால் நான் வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளேன். மேலும் என்னிடம் ஒருதலை பட்சமாக கேள்வி கேட்டனர்.

இந்த குழுவினர் விசாரணை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. என்னை பொறுத்த வரை தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றார். இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.