விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம்: கைதான மாணவி ஜாமீனில் விடுதலை அறிவுரை கூற பெற்றோருக்கு தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இளம்பெண்
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அதே விமானத்தில் தூத்துக்குடி கந்தன்காலனி 2–வது தெருவை சேர்ந்த சாமி மகள் லூயிஸ் சோபியா(வயது 28) என்பவரும் வந்தார். இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் விமானத்தில் வைத்து பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தின் வரவேற்பு அறையில் பொருட்களை எடுப்பதற்காக பயணிகள் காத்து இருந்தனர். அங்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், கோஷம் எழுப்பிய பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் லூயிஸ் சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்(ஐ.பி.சி 290), அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல்(ஐ.பி.சி. 505(1)(பி)) மற்றும் 75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வியின் வீட்டுக்கு சோபியாவை அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அப்போது, 290, 75(1)(சி) ஆகிய 2 பிரிவுகளில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பிறகு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக லூயிஸ் சோபியா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஜாமீன்
நேற்று காலையில் வக்கீல் அதிசயகுமார் தலைமையிலான வக்கீல்கள் தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று காலை 10 மணி அளவில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த மனு மீது மதியம் 12 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து லூயிஸ் சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அப்போது, சோபியாவின் தந்தையிடம், உங்கள் பிள்ளையை நீங்கள் தான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மகளுக்கு அறிவுரை கூறுங்கள். அவர் செய்ததை யாராலும் ஏற்க முடியாது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்று அறிவுரை கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து வக்கீல்கள் சிறப்பு அலுவலர் மூலம் ஜாமீன் உத்தரவை ஜெயிலில் வழங்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு ஜாமீன் உத்தரவு ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடவடிக்கை
இது குறித்து வக்கீல் அதிசயகுமார் கூறும் போது, புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சோபியா மீது 3 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்கள். இதில் இந்திய தண்டனை சட்டம் 505(1)(பி), இந்த வழக்கில் பொருந்தாது என்று அந்த சட்டப்பிரிவில் காவலில் வைக்காமல், மற்ற 2 பிரிவுகளில் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி உத்தரவிட்டார். அந்த பிரிவுகள் பிணையில் விடக்கூடிய பிரிவு. இதனால் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவித்து உள்ளார்கள். மேலும் சோபியாவின் தந்தை சாமி அளித்த புகாரின் பேரில் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று கூறினார்.