வணிக நோக்கத்தோடு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை


வணிக நோக்கத்தோடு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 1:39 PM GMT)

வணிக நோக்கத்தோடு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சென்றனர். பின்னர் அணையை மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். மேலும், அணைப்பூங்காவை அவர் சுற்றிப்பார்த்தார். இதேபோல் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை மற்றும் காலிங்காராயன் அணைக்கட்டு பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கொடிவேரி அணையை சுற்றிப்பார்ப்பதற்கும், குளிக்கவும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் கொடிவேரி அணையில் இன்று (நேற்று) முதல் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வரத்திற்கேற்ப அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கடத்தூர் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் கொடிவேரி அணைக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையில் கூடுதலாக உடைமாற்றும் அறை ஒன்று அமைக்கப்படும்.

ஆறுகள் மற்றும் குளங்களில் மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வணிக நோக்கத்தோடு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

அப்போது அவருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story