ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 8:07 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் நூறு நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறவில்லை என தெரிகிறது. இதனால், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து போதிய வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.

இதையடுத்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நூறு நாள் வேலை கேட்டும், வேலை தொடர்பாக விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். தங்கப்பன், மேரிகில்டா, வேலம்மாள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிரசாத், ராஜகுமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தின் போது, வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூ.224 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் முடிவில், அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story