ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதமாகியும் சாலை அமைக்கப்படாத அவலம்
ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்த போவதாக கூறினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. அது போல் 21 வார்டுகளுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் 11–வது வார்டுக்குட்பட்ட மல்லிகை நகர் பகுதியில், ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் இருந்து ஆபுல்காபுல் தர்கா மற்றும் மல்லிகைநகர் வரையிலும் புதிதாக சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
இவை கொட்டப்பட்டு 4 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அந்த பகுதியில் சாலை போடப்படவில்லை. இதனால் தினமும் அந்த பகுதியை சேர்நத பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் ஜல்லிக்கற்கள் மீது நடந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் இருசக்கரம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் செல்ல பெரிதும் சிரமமடைந்து வருகின்றன. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் மல்லிகை நகர் பகுதியில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலைப்பணியை முழுமையாக முடிக்காவிட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.