சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி - 3 பேர் மீது போலீசில் புகார் மனு


சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி - 3 பேர் மீது போலீசில் புகார் மனு
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 9:11 PM GMT)

பெங்களூருவில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூருவை சேர்ந்த 3 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகனுக்கு பெங்களூருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித்தருவதாக பெங்களூருவை சேர்ந்த 3 பேர் கூறிஉள்ளனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்குவதற்கு பணம் செலவாகும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். அதற்கு பாண்டியன் சம்மதித்துள்ளார். அதைத்தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த 3 பேரும் ரூ.30 லட்சம் கேட்டுள்ளனர். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.10 லட்சம் கொடுக்க பாண்டியன் சம்மதித்துள்ளார். அதன்படி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சத்தை அந்த 3 பேரிடமும் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட 3 நபர்களும் பின்னர் பாண்டியனுடனான தொடர்பை துண்டித்துவிட்டனர். வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்துள்ளார். அதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரூ.10 லட்சத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அதேபோல் அவருடைய மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் வாங்கித்தருவதாக வேலூர் கஸ்பாவை சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார். இதற்காக பாண்டியன் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு, எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடம் வாங்கிக் கொடுக்கவில்லை. இதுகுறித்தும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாண்டியன் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story