மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Sept 2018 4:30 AM IST (Updated: 5 Sept 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.

வேலூர்,

மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

வேலூரை அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் உள்ள பெரிய தேர்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய தம்பி சண்முகம் (வயது 30) மாற்றுத்திறனாளி. இவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை பெறுவதற்கு வேலு விண்ணப்பித்திருந்தார்.

இது சம்பந்தமாக வேலு, வருவாய் ஆய்வாளர் சேகரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டுமானால் ரூ.2,500 லஞ்சமாக தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ரூ.2 ஆயிரம் தருவதாக கூறிய வேலு இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசார் கடந்த 17.2.2012 அன்று ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை வேலுவிடம் கொடுத்து அதை வருவாய் ஆய்வாளர் சேகரிடம் கொடுக்குமாறு கொடுத்து அனுப்பினர்.

அதன்படி வேலு ரூ.2 ஆயிரத்தை, வருவாய் ஆய்வாளர் சேகரிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வருவாய் ஆய்வாளர் சேகருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து சேகர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story