தஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு


தஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 9:26 PM GMT)

தஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு நேற்று நடந்தது. இதில் 377 பேர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2–ம் நிலை போலீசாருக்கான (போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 11–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தஞ்சையிலும் 3 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

இந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித்தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று முன்தினம் ஆண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடைபெற்றது. நேற்று பெண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடந்தது. இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டவர்களில் 377 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு நேற்று எடை, உயரம் சரிபார்க்கப்பட்டு 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 20–ந்தேதி அடுத்த கட்ட தேர்வாக பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த பணி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடற்தகுதி தேர்வையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானம், நீதிமன்ற சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் இந்த சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது.


Next Story