அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Sept 2018 4:00 AM IST (Updated: 5 Sept 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்ககோரி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்ககோரி நேற்று அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றோம். இங்கு கழிப்பிடம், சாலை வசதி இல்லை. மண் சாலைதான் உள்ளது. மழை காலங்களில், இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எங்கள் பகுதியை சுற்றி 2 ஓடைகள் உள்ளது. இதனால் மழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. சுத்தமான குடிநீர் வசதி இல்லை.

தெரு விளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு ஆகியவை இல்லை. மின்இணைப்பு கோரி மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டால், வீட்டு வரி கேட்கிறார்கள். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க இயலாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் உதவி ஆணையாளர் ஜெயராஜை சந்தித்து கோரிக்கையை மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முன்னதாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் மண்டல அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நேற்று காலை அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று 40-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் சாக்கடை கலந்த குடிநீரை ஒரு பாட்டிலில் பிடித்துக்கொண்டு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இந்த நிலையில் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அதில் சாக்கடை கலந்த தண்ணீர் வருகிறது. இதை குடிக்க பயன்படுத்த முடியாது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து அவர்கள் உதவி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Next Story