பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றார் : தடயவியல் ஆய்வில் உறுதியானது


பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றார் : தடயவியல் ஆய்வில் உறுதியானது
x
தினத்தந்தி 4 Sep 2018 11:35 PM GMT (Updated: 4 Sep 2018 11:35 PM GMT)

இன்றுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், பரசுராம் வாக்மோர் தான், பத்திரிகையாளர் கவுரி லங்கேசை சுட்டு கொன்றார் என்பது தடயவியல் ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை அவருடைய வீட்டில் வைத்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த படுகொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்றுடன் (புதன்கிழமை) கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு அடையும் நிலையில் வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அமோல் காலே உள்பட 3 பேரை முற்போக்கு சிந்தனையாளரான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக ைகதான பரசுராம் வாக்மோர் தான் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கலாம் என்று சிறப்பு விசாரணை குழுவினர் கருதினர். இதை உறுதி செய்யும் வகையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கிய வீடியோவை சிறப்பு விசாரணை குழுவினர் குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்காக அனுப்பி வைத்தனர். இதில் ெகாலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் 6 வினாடிகள் ஓடும் வீடியோவும் அடங்கும்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் பரசுராம் வாக்மோர் தான் என சந்தேகித்ததால் அவரை மோட்டார் சைக்கிள் ஓட்ட செய்து இன்னொரு வீடியோவையும் போலீசார் பதிவு செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த 2 வீடியோக்களையும் ‘ெகய்ட்’ முறையில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த முறையில் வீடியோக்களில் இடம்பெற்றிருக்கும் நபரின் உடல் அசைவுகள் மற்றும் அமைப்புகள் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பிட்டு முறையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் உருவம், பரசுராம் வாக்மோருடன் பொருந்தியது. இந்த ஆய்வு அறிக்கை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, கவுரி லங்கேசை சுட்டு கொன்றதாக சிறப்பு விசாரணை குழு வெளியிட்ட வரைபடம் பரசுராம் வாக்மோருடன் பொருந்துவதுடன், கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்ட நபரின் உயரம் 5 அடி 2 இன்ச் என கணக்கிடப்பட்டது. இந்த அம்சமும் பரசுராம் வாக்மோருடன் பொருந்தியுள்ளது.

இதுதவிர, சீகேஹள்ளி வாடகை வீட்டில் பரசுராம் வாக்மோர் தங்கி இருந்ததும், கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் அவர் வீட்டை காலி செய்த விவரங்களை வீட்டு உரிமையாளர் ்கொடுத்த தகவல் மூலம் சிறப்பு விசாரணை குழுவினர் அறிந்து கொண்டனர்.

இந்த நிலையில், தற்போது தடயவியல் ஆய்வு முடிவும் பரசுராம் வாக்மோருடன் பொருந்துவதால், கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் சுட்டு கொன்றார் என்பதை சிறப்பு விசாரணை குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

Next Story