சேலையூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; பெண் உள்பட 2 பேர் கைது
சென்னையை அடுத்த சேலையூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் காயத்ரி கார்டன் பகுதியில் சேலையூர் போலீஸ் சப்–இன்ஸ்பெகடர் ஜெயகணேஷ் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் சந்தேகப்படும்படியாக ஆண்கள் வந்து செல்வதை அவர் கவனித்தார். வீட்டை கண்காணிக்க அருகில் சென்றபோது அவரிடம் வந்து பேசிய பெண் ஒருவர் ‘வீட்டில் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம்’ என கூறினார்.
தன்னிடம் பணம் இல்லை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு, சேலையூர் போலீஸ் நிலையம் வந்த சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ், இது குறித்து உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் மற்றும் போலீசார் மாடம்பாக்கம் காயத்ரி கார்டன் பகுதியில் உள்ள அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வாடகைக்கு வீடு எடுத்து அதில் பெண்களை தங்க வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குரோம்பேட்டை நெமிலிச்சேரி மேட்டு தெருவை சேர்ந்த தனலட்சுமி (வயது 40) என்பவரையும், அங்கு வாடிக்கையாளர்களை அழைத்து வரும் தரகராக செயல்பட்டு வந்த பல்லாவரம் பாரதிநகரை சேர்ந்த மதியழகன் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.