4 வயது சிறுவனுக்கு வயிற்றில் நீர்கட்டி அகற்றம்: மியாட் மருத்துவர்கள் சாதனை


4 வயது சிறுவனுக்கு வயிற்றில் நீர்கட்டி அகற்றம்: மியாட் மருத்துவர்கள் சாதனை
x
தினத்தந்தி 6 Sept 2018 4:30 AM IST (Updated: 6 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பிஜி தீவைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு வயிற்றில் இருந்த 2 கிலோ எடைக்கொண்ட நீர்கட்டியை லேப்ராஸ்கோபி மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

சென்னை.

சென்னை, மியாட் மருத்துவமனை குழந்தை அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் எம்.ராகவன், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிஜி தீவைச் சேர்ந்தவர்கள் சலான் சேண்ட்- சோனம் சேண்ட் தம்பதியினர். இவர்களுடைய மகன் அர்னவ் (வயது 4). இந்த சிறுவன் பிறந்தது முதல் தொடர்ந்து அழுத வண்ணம் இருந்ததுடன் சரியாக சாப்பிடாமல் இருந்ததால் எடை குறைந்து காணப்பட்டுள்ளான். பெற்றோர்கள் பிஜி தீவில் உள்ள மருத்துவர்களிடம் சிறுவனை காண்பித்தனர். டாக்டர்கள், சிறுவனுக்கு வயிற்றில் ஹெர்னியா இருப்பதாக கூறி 3 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருந்தும் சிறுவனுக்கு பிரச்சினை தீரவில்லை.

பின்னர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அர்னவ் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த போது சிறுவனின் வயிற்றில் உலகின் மிக அரிதான பெரிய நீர்கட்டி இருப்பது தெரியவந்தது. உடல் உறுப்புகளை சேதப்படுத்தி வந்ததால் இந்த கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அரிதான மற்றும் சிக்கலான செயல்முறையை மேற்கொள்ளும் வகையில் துளைகள் போட்டு அளிக்கப்படும் சிகிச்சை (லேப்ராஸ்கோபி) மூலம் சிறுவனின் வயிற்றில் 3 துளை போட்டு 2 மணி நேரத்தில் கட்டியை அகற்றி சாதனை படைத்து உள்ளோம். 1 லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற நீர் கட்டி வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவில் ரூ.12 லட்சம் செலவிட வேண்டிய இந்த சிகிச்சையை ரூ.2 லட்சம் செலவில் சென்னையில் செய்து முடிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர் சர்வவினோதினி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story