சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு


சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 Sept 2018 4:30 AM IST (Updated: 6 Sept 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்ற போது இலுப்பூர் போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 24) தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், இருதரப்பினரையும் இலுப்பூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்காக கேசவன் அவரது தரப்பினை சேர்ந்த பாலசுப்பிரமணி (24), மணிகண்டன் (30) ஆகியோருடன் வந்து இலுப்பூர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். அப்போது அங்கு கண்ணன் உள்பட சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்த கேசவன், பாலசுப்பிரமணி, மணிகண்டன் ஆகிய 3 பேரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே போலீஸ் நிலையம் முன்பு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தரப்பினர் அரிவாளால் கேசவன், பாலசுப்பிரமணி, மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த கேசவன் உள்பட 3 பேரும், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு கொண்டு, ரத்தம் சொட்ட போலீஸ் நிலையம் உள்ளே ஓடினர். இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தக்கறையானது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் கேசவன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன் உள்பட அவரது தரப்பினை சேர்ந்த சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story