மதசார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரம் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி,
விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள இந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், செல்வ.நந்தன், பொன்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஓய்வெடுப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
நாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. தங்களுக்கு எதிராக யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று நினைக்கிறது. இதற்காக எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகளை மிரட்டி வருகிறது.
அவர்களை எதிர்த்து கருத்து சொல்லக்கூடாது என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? இந்திய ஒரு ஜனநாயக நாடு. சமீபத்தில் கூட சோபியா என்ற மாணவி பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக கோஷமிட்டார் என்பதற்காக அவரை கைது செய்தார்கள்.
எழுத்தாளர் ரவிக்குமாருக்கு புதுவை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவருக்கு பின்னால் நிறைய பேர் உள்ளனர். மதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.