கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 6 Sept 2018 3:00 AM IST (Updated: 6 Sept 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில், கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேடசந்தூர், 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். இவர் குன்னம்பட்டியில் அட்டை தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகள் தனலட்சுமி (வயது 25). இவருக்கும், சென்னை பாடியை சேர்ந்த உறவினர் சதீஷ் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான 3 வருடத்தில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தனலட்சுமி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். இதையடுத்து தாயார் வீட்டில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு ஜோதிராமலிங்கம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அந்த திருமணத்துக்கு சதீசும் வந்துள்ளார். அப்போது சதீஷ், தனலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ஜோதிராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜோதிராமலிங்கம், தனலட்சுமியிடம் தெரிவித்தார். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று தனலட்சுமி மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர்கள் வேடசந்தூருக்கு திரும்பி வந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட தனலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தனலட்சுமிக்கு திருமணம் ஆகி 6 வருடங்களே ஆவதால் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜும் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story