மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி: ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று முழுமையாக தடுக்கப்படும் + "||" + Rehabilitation work on the Kollidam Dam: Water flow in the river will be completely blocked today

கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி: ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று முழுமையாக தடுக்கப்படும்

கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி: ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று முழுமையாக தடுக்கப்படும்
கொள்ளிடம் அணையில் இருந்து மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று (வியாழக்கிழமை) முழுமையாக தடுக்கப்படும். மேலும் பாறாங்கற்கள் மூலம் தடுப்புகள் அமைப்பது நிறைவடைகிறது.
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி 9 மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியேறி செல்லும் இடத்தில் பாறாங்கற்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதில் நேற்று மாலை இறுதிகட்டத்தை எட்டியது. இன்னும் சில அடி தூரம் வரை தான் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டி உள்ளது.


இதேபோல அணையின் மேற்குபகுதியில் தண்ணீரில் மணல் மூட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிகாரிகள், தொழிலாளர்கள் பகல், இரவாக மேற்கொண்ட பணியின் காரணமாக தடுப்புகள் அமைப்பது முழுமை பெற உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் நேற்று மாலை நேரம் முக்கொம்பு மேலணையில் இருந்து வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேறியது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று (வியாழக்கிழமை) முழுமையாக தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பாறாங்கற்கள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணியும் நிறைவடைய உள்ளது. அதன்பின் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் கூடுதல் தீவிரம் காட்டப்பட உள்ளது. இதற்கிடையில் தற்போது வரை ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று மாலை அளவீடு செய்தனர். தடுப்புகள் பணி முடிவடைந்த பின் மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் தடுப்புகளுக்கு உடையே கான்கிரீட் மூலம் தடுப்பு சுவர் கட்டப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைப்பு சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 30 அடி தூரம் தான் சரிசெய்யும் பணிகள் உள்ளது. இப்பணி நாளை (அதாவது இன்று)நிறைவடையும் தருவாயில் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பே உடைப்பை சரிசெய்யும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தண்ணீரின் வேகமும், ஆழமும் அதிகமாக இருந்ததால் தாமதமானது. பெரிய பாறாங்கற்களை கொண்டு அடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறையினரும் மற்றும் மாவட்ட கலெக்டரும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியை முடுக்கி விட்டு விரைவாக பணிகளை முடிக்க களத்தில் இருந்தே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சீரமைப்பு பணியின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் என்னிடம் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) கேட்டு வருகின்றனர். மேலும் நான் சென்னை சென்றிருந்த போது முதல்-அமைச்சரிடம் சீரமைப்பு பணி விவரத்தை கூறினேன். காவிரியில் வழக்கம்போல் விவசாயத்திற்கு கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆய்வின் போது கலெக்டர் ராஜாமணி, மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது: கடைமடை பகுதியில் குளங்களுக்கு வந்து சேராத தண்ணீர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் பல நாட்களுக்கு பிறகு தற்போது 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது. இருப்பினும் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதி குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
2. கொள்ளிடம் கடைமடைபகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
கொள்ளிடம் கடைமடை பகுதி பாசனத்துக்கு புதுமண்ணியாறு, பொறைவாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. பொய்கை அணையில் விரிசல் தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்
ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்.
4. கொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெள்ளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பினால் கொள்ளிடம் பாலத்தின் 7 தூண்கள் பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
5. கொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியது
கொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.