கழிவு நீர் குளமாக மாறிய திருச்சி ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்


கழிவு நீர் குளமாக மாறிய திருச்சி ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Sept 2018 4:00 AM IST (Updated: 6 Sept 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் பஸ் நிறுத்தம் கழிவு நீர் குளமாக மாறி விட்டது. இதை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் தினந்தோறும் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் காதிகிராப்ட் அங்காடிக்கு எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். அதே போன்று திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் ரெயில்வே நிலையம் வழியாக வந்த பின்னர் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது உண்டு. இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி ஏராளமான சிறிய கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க பலரும் வருவார்கள். இதனால் இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு அதன் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து செல்வது உண்டு. இதனை பல முறை பத்திரிகைகள் சுட்டிக்காட்டி உள்ளன. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக கழிவு நீர் பஸ் நிறுத்தத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த இடத்தில் நின்று பஸ் ஏற முடியாமலும், பஸ்சில் இருந்து பயணிகள் இறங்க முடியாமலும் பரிதவித்து வருகிறார்கள். இது தவிர அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கழிவு நீரை பயணிகள் மீது வாரி இறைத்தும் செல்கின்றன. இதனால் அங்கு வரும் பயணிகள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இதனை பல முறை சுட்டிக்காட்டியும் திருச்சி மாவட்ட நிர்வாகமோ, மாநகராட்சி நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கு வரும் பயணிகள் தலைவிதியே என தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். இப்படி தினம், தினம் நாங்கள் படும் அவதி அதிகாரிகளுக்கு தெரியுமா? என பல பயணிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்கள். வியாபாரிகள் பலரும் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்து உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி தூய்மை பயணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது திருச்சி ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் இந்த லட்சணத்தில் இருப்பதை கண்டு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு திருச்சியின் தூய்மைபற்றி சந்தேகம் வரும். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தொற்று நோய் ஏற்படாத வண்ணம் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Next Story