சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2018 2:30 AM IST (Updated: 6 Sept 2018 5:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

உதவித்தொகை

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018–19 கல்வியாண்டில் ஒன்று முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ்–1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற, மத்திய அரசின்

www.scholarship.gov.in என்ற என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை மாணவ–மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பம்

மாணவ– மாணவிகள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மிகுந்த கவனத்துடன் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவ–மாணவிகளது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலகெடுவிற்குள் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ– மாணவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும மாற்றவோ திருத்தவோ இயலாது.

கல்வி நிலையங்கள்

கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வருகிற 30–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு...

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிபாட்டு நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ– மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story