வயலில் பிணமாக கிடந்தவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரவுடி: கழுத்தை அறுத்து கொல்லப்பட்டது அம்பலம்


வயலில் பிணமாக கிடந்தவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரவுடி: கழுத்தை அறுத்து கொல்லப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:30 AM IST (Updated: 7 Sept 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே வயலில் பிணமாக கிடந்தவர் ரவுடி என்றும், அவர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டுக்கோட்டை,


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் நசுவினி ஆற்றங்கரை ஓரத்தில் மெயின் ரோடு அருகே வயலில் நேற்றுமுன்தினம் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபர் வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார்.

அவர் அருகில் ஒரு எவர்சில்வர் குடம் ரத்தக்கறையுடன் நசுங்கிய நிலையில் கிடந்தது. தஞ்சையில் இருந்து துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து வடசேரி செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. வாலிபரின் பிணத்தை போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் ஆறுமுகம்(வயது32) என்றும் இவரது பெயர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் ஆறுமுகம் மீது கொலை, திருட்டு மற்றும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தற்போது ஆறுமுகம் சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டையில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக யாரோ சில மர்ம நபர்கள் கடத்தி சென்று சூரப்பள்ளம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தலையில் ஆயுதங்களால் தாக்கி கழுத்தை அறுத்துக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கழுத்தை அறுத்து ரவுடி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story