வறுமை வாட்டியதால் பரிதாப முடிவு: பேரனை கொன்று பாட்டி தற்கொலை


வறுமை வாட்டியதால் பரிதாப முடிவு: பேரனை கொன்று பாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2018 4:45 AM IST (Updated: 7 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

வறுமை வாட்டியதால் பேரனை கொன்று விட்டு, பாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி சொர்ணவள்ளி (வயது 60). இவர்களுக்கு பன்னீர்செல்வம், தங்கராஜ் என்ற 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். செல்லையா பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதேபோல, தங்கராஜ் மனைவி நாகேஸ்வரியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், நாகேஸ்வரியின் மகன் பாண்டியை(9) சொர்ணவள்ளி வளர்த்து வந்தார். பாண்டி பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வந்த சொர்ணவள்ளியின் குடும்பத்தினர், அரசின் விதிமுறைகள் காரணமாக மண்பாண்டம் செய்ய நீர்நிலைகளில் மண் எடுக்க முடியாததாலும், மண்பாண்ட தொழில் நலிவுற்றதாலும் அந்த தொழிலை கைவிட்டு, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், வயது முதிர்வின் காரணமாக சொர்ணவள்ளியால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், தங்கராஜ் ஒருவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தங்கராஜிக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரால் சொர்ணவள்ளிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சொர்ணவள்ளியும், அவரது பேரனும் சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த சொர்ணவள்ளி, தான் உயிருடன் இருக்கும்போதே, தனது பேரன் பாண்டி பசியால் வாடுகிறானே, தான் இறந்தபிறகு அவனை யார் பார்த்து கொள்வார்கள் என வேதனைப்பட்டார். இதனால், வேதனையின் விளிம்பிற்கே சென்ற சொர்ணவள்ளி நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சுமார் 200 அடி தள்ளி உள்ள சுடுகாட்டுக்கு பேரன் பாண்டியை அழைத்துச்சென்றார். பின்னர், அங்குள்ள புளியமரத்தடியில் அமர்ந்து தான் கொண்டு சென்ற எலி மருந்தை (விஷம்) பாண்டிக்கு கொடுத்து விட்டு, தானும் அதே மருந்தை தின்றார். சிறிது நேரத்தில் இருவரும் அங்கேயே மயங்கி கிடந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று அதிகாலை சொர்ணவள்ளியும், பாண்டியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்ததால் பேரனை கொன்று விட்டு, பாட்டியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story