ராமேசுவரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும், போலீசார் அறிவுறுத்தல்


ராமேசுவரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும், போலீசார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Sept 2018 4:15 AM IST (Updated: 7 Sept 2018 11:45 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் கடைகளில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் பற்றிய தகவல்களை, பணியில் ஈடுபடுத்துபவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ராமேசுவரம்,

தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் கட்டிட வேலைகளில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஏராளமான இடங்களில் வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் குற்றங்களை முழுமையாக தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சப்–இன்ஸ்பெக்டர் அருண்குமார், தங்கும் விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பிரபு கூறியதாவது:– ராமேசுவரம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கட்டுமான பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணியமர்த்துபவர்கள் அவர்கள் பற்றிய முழு விவரங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

போலீசாரால் அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து வடமாநில இளைஞர்கள் புகைப்படம் ஒட்டி ஒப்படைக்க நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களை பணியில் அமர்த்தியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல கட்டிட பணியில் ஈடுபடுத்தியுள்ள என்ஜினீயர் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story