பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றல் மையத்தை உடனே தொடங்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை கண்டித்து போராட்டம்


பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றல் மையத்தை உடனே தொடங்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:30 AM IST (Updated: 8 Sept 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றல் மையத்தை உடனே தொடங்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடவள்ளி,

கோவை பாரதியார் பல்கலைக்கழக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் தந்தை பெரியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது:–

பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுறுத்தலின்படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தொலைமுறை கல்விக் கூட கல்வி மையங்களின் அங்கீகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.

மேலும் நாக் மதிப்பீட்டுக்குழுவின் அடிப்படையில் மதிப்பெண் 3.26 க்கும் குறைவாக பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தொலைமுறை கல்விக்கூடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று தொலைமுறை கல்விக்கூடத்தை இயக்கி வருகின்றன.

இதற்கிடையே கடந்த 13–ந் தேதி உயர் கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு உயர் கல்வி கற்றல் மையம் எனும் பெயரில் தொலைமுறைக்கல்விக் கூடத்தை நடத்த முடிவு செய்யப் பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் தொலைமுறைக்கல்வி மையம் நடத்த விருப்பம் உள்ள கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பாரதியார் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 42 கல்லூரிகளிடம் இருந்தும் பிற மாவட்டங்களில் செயல்படும் 3 கல்லூரிகளிடம் இருந்தும் விண்ணப்பங் கள் பெறப்பட்டன. அந்த கல்லூரிகளுடன், பல்கலைக்கழகம் கடந்த 5–ந் தேதி முதல் 12–ந் தேதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர் கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், இதன் இதர செலவினங்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோரின் ஊதியம், ஓய்வூதியம் போன்ற நிதிச் செலவுகளை சமாளிப்பதற்கும் தொலைமுறைக்கல்விக்கூடம் இயங்க வேண்டியது அவசியம். கடந்த 13–ந் தேதி நடைபெற்ற ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்று தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் 3 பேர் தற்போது திடீரென எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் சுயநிதிக்கல்லூரிகள் சங்க நிர்வாகிகள் சிலரும், மாணவர்களிடம் குழப்பம் விளைவிக்கும் விதமாக பேசி வருகின்றனர். சுயநிதிக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு யு.ஜி.சி. விதிகளை பின்பற்றி சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பதை அந்த சங்க நிர்வாகிகள் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் இனியாவது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். உயர்கல்வி கற்றல் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை கண்டித்து போராட்டம் நடத்துவோம்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story