தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி


தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் வி‌ஷம் குடித்த மாணவி
x
தினத்தந்தி 7 Sep 2018 10:15 PM GMT (Updated: 7 Sep 2018 8:24 PM GMT)

கோவையில் தலைமை ஆசிரியை திட்டியதால் பள்ளி வளாகத்துக்குள் மாணவி வி‌ஷம் குடித்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், 9–ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் இருவரும் பள்ளி வராண்டாவில் நின்று தகராறு செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் இருவரையும் அழைத்து திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் அழுதுகொண்டே வகுப்பறைக்கு சென்று உள்ளனர். அவர்களை சக மாணவிகள் சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவிகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த அந்த 10–ம் வகுப்பு மாணவி, பூச்சி மருந்தையும் (வி‌ஷம்) கொண்டு வந்ததாக தெரிகிறது. அவர், காலை 10.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து வி‌ஷ மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள் பள்ளி ஆசிரியைகளிடம் கூறினார்கள்.

உடனே அவர்கள் அந்த மாணவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அந்த மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘வி‌ஷம் குடித்த மாணவி, அந்த வி‌ஷத்தை விழுங்காமல் வாய் பகுதியிலேயே வைத்துள்ளார். இதனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வில்லை. எனினும் அவருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை யாரும் எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.


Next Story