மானாவாரி விவசாயத்திற்கு மழை வேண்டி வானம் பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்


மானாவாரி விவசாயத்திற்கு மழை வேண்டி வானம் பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:21 AM IST (Updated: 8 Sept 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்திற்கு மழை வேண்டி வானம் பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம், 


கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும் அதனால் பயனடையும் விவசாய நிலப்பரப்பு மிக குறைவே. மாவட்டத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தின் பெரும் பகுதி, கடவூர், தோகைமலை, தாந்தோன்றி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் சிறிய அளவில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்றாலும். பெரும் பரப்பளவு விவசாய நிலங்கள் மானாவாரி விவசாயத்தை நம்பியே விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். மழை நீரை சேமிக்காமையால் நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றதால் கிணறுகள் வற்றியும், ஆழ்துளை கிணறுகளில் குடி நீருக்குக்கூட நீர் இல்லாமல் போய்விட்டது. இதனால் மானாவாரி விவசாய நிலங்களில் பெய்யும் பருவ மழையை நம்பி சோளம், கம்பு, எள், நிலக்கடலை, ஆமணக்கு, துவரை, மக்காச்சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது இப்பகுதி விவசாயிகளின் வழக்கம் இதற்காக சித்திரை மாதத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யும் விவசாயிகள் தொடர்ந்து வைகாசியில் பெய்யும் மழையை கொண்டு சோளத்துடன் ஊடுபயிராக துவரையை பயிர்செய்வர்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் சொல்லுக்கிணங்க ஆடி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு எள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட பிற பயிர்களை பயிர் செய்கின்றனர். சோளம், கம்பு போன்றவற்றை அறுவடை செய்து உணவுக்காக பயன்படுத்திக்கொள்ளும் விவசாயிகள் அவற்றின் தட்டையை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி மண்வளத்தால் நன்றாக விளையும் துவரைக்கு தனிசுவை உண்டு. குறிப்பாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விளையும் துவரையை செம்மண் நீரில் நன்கு ஊறவைத்து பின் உலர்த்தி பருப்பாக உடைத்து தங்களின் குடும்ப தேவைக்கு போக மீதி பருப்பை இப்பகுதி விவசாயிகள் விற்கின்றனர். சேங்கல் பருப்பு என பெயர் பெற்ற அந்த பருப்பில் தயாராகும் சாம்பாரின் சுவை அறிந்த வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் தேவைக்கும், வெளிநாடுகளிலுள்ள தங்களின் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கவும் இந்த பகுதிக்கு வந்து பருப்பை வாங்கி செல்கின்றனர். பணப்பயிராக பயிரிட்ட எள்ளு, நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவற்றை அறுவடை செய்து விற்று தங்களின் குடும்ப செலவுக்கான பணத்தை பெறுகின்றனர்.

பருவம் தவறாமல் பெய்த மழையால் சிறப்பாக நடைபெற்று வந்த இந்த மானாவாரி விவசாயம் கடந்த சில ஆண்டுகளாக உரிய காலத்தில் பெய்யாத மழையினால் பாதிப்படைந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் உரிய காலத்தில் மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்தாலும் அது ஏமாற்றத்தையே தருகிறது. அதேபோல் இந்தாண்டும் சித்திரையில் கோடை உழவுக்கும், வைகாசியில் சோளம், துவரை விதைப்புக்கும் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆடி மாதத்தில் பயிர் செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், ஆவணி மாதத்தின் மத்தியில் கூட மழை பெய்யவில்லை. பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப காத்திருக்கும் விவசாயிகளுக்கு அண்மை காலங்களில் பருவம் தவறியே மழைபெய்கிறது. அதையும் வீணாக்காமல் பயிர் செய்தாலும் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைப்பதில்லை என வேதனைப்படும் விவசாயிகள் இன்னும் சில தினங்களுக்குள் மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Next Story