டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
வத்தலக்குண்டுவில், டாக்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்த முத்து மகன் அழகு முருகன் (வயது 25). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அழகு முருகன் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வத்தலக்குண்டுவில் உள்ள டாக்டர் முஜிபுர் ரகுமானுடைய பல் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.இந்தநிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக அழகு முருகன் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார். இதுகுறித்து அறிந்த டாக்டர் முஜிபுர் ரகுமான், அழகு முருகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர் மீது அழகு முருகன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் கணவாய்ப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் முஜிபுர் ரகுமானுடைய வீட்டுக்கு சென்ற அழகு முருகன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அழகு முருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முஜிபுர் ரகுமானை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முஜிபுர் ரகுமான் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு முருகனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story