7-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த முதியவருக்கு தர்ம அடி


7-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த முதியவருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 8 Sept 2018 3:30 AM IST (Updated: 8 Sept 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, 7-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த முதியவரை பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாடிக்கொம்பு, 


திண்டுக்கல் அருகே கட்டப்பட்டு வரும் ரெயில்வே பாலத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தினக்கூலி அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பாலம் வழியாக பள்ளிக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நைசாக பேசி பழகி உள்ளார்.

ஒருநாள் மாலை அந்த மாணவியை அங்குள்ள முட்புதருக்குள் அழைத்து சென்று கற்பழித்துள்ளார். மேலும், நடந்த விவரத்தை யாரிடமும் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சமடைந்த மாணவியை மிரட்டி பலமுறை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதேபோல, நேற்று முன்தினம் மாலையும் மாணவியை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மாலை ஊர் இளைஞர்கள் பலர் திரண்டு சென்று முதியவரை பிடித்து ஊருக்குள் இழுத்து வந்தனர்.

பின்னர், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த முதியவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story