வேலைக்கார பெண்ணை கற்பழித்த வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது


வேலைக்கார பெண்ணை கற்பழித்த வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது
x
தினத்தந்தி 7 Sep 2018 11:08 PM GMT (Updated: 2018-09-08T04:38:29+05:30)

வேலைக்கார பெண்ணை கற்பழித்த வருமான வரித்துறை துணை கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை வருமான வரித்துறையில் பணிபுரிந்து வரும் துணை கமிஷனர் ஒருவர் தென்மும்பை பெடர்ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 16 வயது இளம்பெண் ஒருவர் வீட்டு வேலைகள் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண்ணை வருமான வரித்துறை துணை கமிஷனர் மிரட்டி கற்பழித்து உள்ளார்.

பின்னர் அவர் சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். நான் வருமான வரித்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. உனக்கு தேவையான நகை மற்றும் ஆடம்பர ஆடைகளை கொடுக்கிறேன். பணம் தேவைப்படும் போது என்னிடம் நீ தயங்காமல் கேட்கலாம். நீ சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் செலவுக்காக ரூ.10 ஆயிரம் தருகிறன் என்று கூறியுள்ளார்.

மேலும் நகை ஒன்றையும் அந்த பெண்ணுக்கு கொடுத்து இருக்கிறார். இதன் பின்னரும் ஒருநாள் அவர் வேலைக்கார பெண்ணை கற்பழித்தார். இதனால் அந்த பெண் அழுது கொண்டே இருந்து உள்ளார். அப்போது தான் இந்த விவகாரம் துணை கமிஷனரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்தார். இளம்பெண்ணை அலிகாரில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி விட்டார். மேலும் அவர் தனது கணவரை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளம்பெண் மீண்டும் தனது வீட்டுக்கு வேலைக்கு வர கோரி துணை கமிஷனர் அவரது வீட்டினருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இளம்பெண் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்ணின் தாய் மகளை காம்தேவி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து வருமான வரித்துறை துணை கமிஷனர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 10-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். 

Next Story